திருச்சி மாவட்ட அண்ணா புஷ்ப தொழிற்சங்க செயலாளர் ரெங்கராஜ் படையப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
திருச்சி மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் பூக்களை திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் பூச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவர். இங்கு விற்கப்படும் பூக்கள் திருச்சி மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகின்றன. இதன் மூலம் சுமார் ரூ 1கோடி வர்த்தகம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை செடிகளிலிருந்து பறிகாமலேயே விடும் நிலை உள்ளது. பல லட்சம் ரூபாய்களை கடன் வாங்கி பூ விவசாயம் செய்த விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமலும், கடனை கட்டமுடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு, ஒரு ஏக்கருக்கு ரூ 1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் நறுமண தொழிற்சாலைகளை அமைத்து பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.