தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஜனவரி 31ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா அல்லது தளர்வு அளிப்பதா, இரவுநேர ஊடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது ரத்து செய்வதா என இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது.குறிப்பாக பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், 30ம் தேதி முழு ஊரடங்கும் ரத்து செய்யப் படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.