திருச்சி ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டை ஒன்பதாவது வார்டு புது தெரு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டை ஒன்பதாவது வார்டு புது தெரு பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் கழிவுகள் பரவி கிடப்பதாலும் சீர்கேடு அடைந்து நோய் தொற்றும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத்தில் மனு கொடுத்த போது அப்பகுதியில் உள்ள ஆக்கிரப்பு அகற்றாமல் எந்தவித பராமரிப்பு பணிகள் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். மேலும் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரிடம் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் ஊராட்சியின் செயலாளர் மற்றும் தலைவருக்கு உள்ளது எனவே ஊரக வளர்ச்சித் துறையில் தமிழ்நாடு அரசாணை படி ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு அதிகாரியாக இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என உத்தரவு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே தயவு கூர்ந்து ஊராட்சிக்கு சொந்தமான 15 அடி பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்காக எங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரமைப்பு பணிகளை செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது