தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு , அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது . இருப்பினும் , பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் , சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும் , நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருவதால் , பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் , மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் , முழு ஊரடங்கு 10.05.2021 முதல் 24.05.2021 முதல் அமலில் உள்ளது . மேலும் 16.05.2021 மற்றும் 23.05.2021 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 17.05.2021 – ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் செல்ல அரசால் ‘ இ – பதிவு ‘ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது .
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி , திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் அரசு உத்தரவை மீறி முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும் , சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத நபர்கள் மீதும் , நெறிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக வளாகங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது . திருச்சி மாநகரில் 50 – க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த சுமார் 250 – க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .