மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மரியாதை செய்யும் வகையில், அவர் பிறந்து வளர்ந்த அவரது சொந்த கிராமத்தில் நினைவு இல்லம் கட்ட கேரள அரசு 1 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது..
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் உள்ள இசைப் பிரியர்களால் மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்டவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவர் கேரளாவில் பிறந்த மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி களிலும் தன் இசையால் ரசிகர்களை ஈர்த்தவர். தமிழில் அவரது திரைப் பங்களிப்பு மிக மிக அதிகம். தன் வாழ் நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர். எம்.எஸ். விஸ்வநாதனின் இசைப் பயணம் 87-வது வயதில் அவரது இறப்பு வரை இசைப் பிரியர்களின் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறது. இசை மட்டுமல்லாது திரைப்பட நடிப்பிலும் அவரது பங்களிப்பு இருந்தது. அவரைக் கவுரவிக்கும் வகையில் அவர் பிறந்த ஊரில் நினைவு இல்லம் கட்ட ஒருகோடி ரூபாய் நிதியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. குறிப்பாக இந்த நினைவு இல்லத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் திரை இசைப் பயணம் குறித்த ஆவணங்கள் இடம்பெற உள்ளன.