திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இவர் நேற்று விடியற்காலை 2.50 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி சென்று பிடிக்க முற்பட்டபோது ஆடு திருடர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலுக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் மற்றும் போலீசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்த குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன், இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி அரசு ஆகியோர் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் 2 எஸ்ஐகள் உள்ளிட்ட 4 தனிப்படைகள் அமைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உதவியோடு கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்டனர்.
இந்நிலையில் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்த வழக்கில் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுவனுக்கு 12 வயதும், மற்றொரு சிறுவனுக்கு 17 வயது என தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூரின் கல்லனையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கண்டிபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.