திருச்சி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 10வது மாநாடு உறையூர் ராமலிங்க நகர் கூட்டுறவு மினிஹாலில் ரயில்வே கந்தசாமி நினைவு அரங்கில் நடராஜா தலைமையில் மாநாட்டு கொடியினை மாநில செயலாளர் ஆறுமுகம் ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். கட்டுமானம் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை போக்குவரத்து சுப்பிரமணியன் முன்மொழிய அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்.மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் வேலை அறிக்கையினையும் பொருளாளர் பாலமுருகன் வரவு செலவு அறிக்கை இணையும் சமர்ப்பித்தனர். பிரதிநிதிகள் விவாதத்திற்கு பின் ஏக மனதாக ஏற்கப்பட்டது. மாநிலச் செயலாளர் ஈரோடு சின்னசாமி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டு நிர்வாகிகளாக தலைவர் நடராஜா பொதுச் செயலாளராக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பொருளாளராக வங்கி ராமராஜ் துணைத் தலைவர்களாக கட்டுமானம் செல்வகுமார் ,ஜனசக்தி உசேன், சிவா, நேரு துரை, திராவிட மணி செயலாளர்களாக சுப்பிரமணியன், அன்சர் தீன், கணேசன் ,முருகன், கங்காதரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 அக்டோபர் 20-ல் வெளியிட்ட அரசாணை 152 நகர்புற உள்ளாட்சி கட்டமைப்பினை தனியார் வசம் தள்ளிவிடும் நோக்கம் கொண்டது. சுகாதாரம் மற்றும் தூய்மை பணியாளர்களையும் நிர்வாகப் பணியாளர்களையும் வெளி முகமை (அவுட்சோர்சிங்) மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையினை திரும்ப பெற்று காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியம் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமனம் செய்திட வேண்டும்.2. அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி அகவிலைப்படி ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்கிட வேண்டும். நவம்பர் 2015 முதல் கணக்கிட்டு நிலுவை தொகையும் வழங்கிட வேண்டும்.
3. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சமூக பாதுகாப்பு திட்டம்- 2020 தமிழ்நாடு தொழிலாளர்கள் போராடி பெற்ற நடைமுறையில் இருந்து வரும் அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கான நலவாரியங்கள், குறிப்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், நலத்திட்டமும் அதற்கு அடிப்படையாக தமிழ்நாட்டில் ஏற்றப்பட்டுள்ள 1982 ஆம் ஆண்டின் மாநில சட்டத்தை செயலற்றதாக்கிவிடும் என்பதால் ஒன்றிய அரசின் திட்டத்தை கைவிட தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.4. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் 60 வயதுக்கு மேல் ஓய்வு காலத்தில் இறக்கும் நாள் வரையில் சிரமமின்றி வாழ்ந்திட குறைந்தபட்சம் ரூபாய் 6000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் பாண்டிச்சேரி அரசு வழங்கியது போல் பண்டிகை கால போனஸ் தமிழகத்திலும் நலவாரியம் மூலம் வழங்கிட வேண்டும்.5. அனைத்து துறைகளிலும் குறிப்பாக அமைப்புசாரா மற்றும் கட்டட கட்டுமானத் தொழிலில் 90% வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
6. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளில் பயன்படுத்துவதை கைவிட்டு ஊராட்சி பணியாளர்களாக நியமனம் செய்து பணிப்பதிவேடு பராமரித்து பணி நிரந்தரமும் குறைந்தபட்ச ஊதியமும் வழங்கிட வேண்டும்.நாட்டினை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இந்திரஜித் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா அகில இந்திய வங்கி நிதி வசூலிப்போர் சம்மேளன பொதுச் செயலாளர் பொன்னுசாமி தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன அகில இந்திய துணைத் தலைவர் பழனியப்பன் பொதுஇன்சூரன்ஸ் தொழிற்சங்க திருச்சி மண்டல செயலாளர் ஸ்ரீவத்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மேற்குப் பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி நன்றி உரை கூறினார்.