தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் திருவண்ணாமலை தினேஷ், மாநில சட்டஆலோசகர் வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன், மாநில துணைபொதுச்செயலாளர் தஞ்சை தங்கமுத்து, மாநில துணைத்தலைவர்கள் சந்திரசேகர், அன்பழகன், மேகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செய்திதொடர்பாளர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார்.

கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

விவசாய விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தர கோரியும், கோதாவரி – காவிரியை இணைப்பதாக உறுதிமொழி கொடுத்தார். அந்த உறுதிமொழியை இன்றுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், கோதாவரி – காவிரி இணைப்பை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் மாதம் டெல்லி சென்று போராடுவது என்றும், கர்நாடகா காவிரியில் திறந்துவடும் வெள்ள நீரை வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு காவிரி கொள்ளிடத்தில் 50 இடங்களில் தடுப்பணைகள் கட்டியும், காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு விவசாய வேலை கிடைக்காததால் 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் தற்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் கொடுப்பதால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை. ஒன்று 100 நாள் வேலையை ஆறு மாதம் கொடுத்து, ஆறு மாதம் நிறுத்தி வையுங்கள். இரண்டு 100 நாள் வேலையாட்களை விவசாயப் பணிகளுக்கு அனுப்பினால் அவர்கள் சம்பளம் ரூ.273-ல் பாதி பணத்தை விவசாயிகள் கொடுத்து விவசாயிகள் வேலை வாங்கிக் கொள்கிறோம். இதனை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும், இல்லையெனில் டெல்லி சென்று போராடுவது என்றும்,

ஒவ்வொரு DPC-யிலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்குரிய கூலியை அரசே வழங்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் பிடிக்கும் மூட்டைக்கு லஞ்சம் வாங்க கூடாது. நெல்லை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு ஒவ்வொரு DPC-க்கும் சேமிப்புக் கிடங்கு கட்ட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கம்பெனிகளும், தனியார் முதலாளிகளும் மின் இணைப்பு கேட்டால் ஒரு மாதத்தில் வழங்குவது போல விவசாயிகளுக்கும் மின்னிணைப்பு ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. 100 ஆண்டுகள் இல்லாத மழை பெய்ததால் நிறைய பயிர்கள் அழிந்துவிட்டது. மீதி உள்ள பயிர்களில் இருந்து கூட பாதி மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே ஒரு ஏக்கருக்கு எல்லா பயிர்களுக்கும் ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் விவசாயிகளை ஏமாற்றுவதால் மத்திய மாநில அரசுகளே இன்சூரன்சிற்கு விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் என்றும், இன்றளவும் இன்சூரன்ஸ் தொகை விவசாயிகளுக்கு வழங்காமல் இருக்கின்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்து பாக்கி இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு வாங்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கடுமையான மழையினாலும், கோமாரி நோயினாலும் உயிரிழந்து பிரேதப் பரிசோதனை செய்யப்படாத ஆடு,மாடு, கோழிகளுக்கும் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்று ஏகமனதாக இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *