இந்தாண்டு குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. அந்த ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி உள்ளிட்டோரின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த ஊர்தியை குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ள அனுமதிக்காமல் ஒன்றிய அரசு அதை நிராகரித்தது. அதனையடுத்து அந்த ஊர்தி தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் மேலும் தமிழகம் முழுவது அது கொண்டு செல்லப்படும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றப்பின் அந்த ஊர்தி இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி வந்தது. திருச்சி மன்னார்புரம் அருகே வந்த அந்த ஊர்தியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சிறிது நேரம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊர்தியை பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர் அந்த ஊர்தி மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.