திருப்பத்தூர் மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் இவரது மனைவி மீனாட்சி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி விடுமுறைக்காக மீனாட்சியின் சொந்த ஊரான கைலாசகிரிக்கு குடும்பத்துடன் வந்த லோகேஸ்வரன் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள முருகன் மலைகோவில் குளத்தில் குளிக்கச் சென்ற போது அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து எதிர்பாராதவிதமாக தந்தையான லோகேஸ்வரன் கண்முன்னே குழந்தைகள் ஜஸ்வந்த் மற்றும் ஹரிபிரீத்தா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் குழந்தைகள் இறந்த துக்கத்தில் மறுநாளே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் லோகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது மனைவி மீனாட்சி உயிர் பிழைத்து கைலாசகிரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கணவன் மற்றும் குழந்தைகளை இழந்த துக்கத்திலிருந்து மீளாத மீனாட்சி கடந்த 5 மாத காலமாக சரிவர உணவு உட்கொள்ளாமல் கணவன் மற்றும் குழந்தைகள் நினைவாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த துக்கத்தில் தாய் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே அடுத்தடுத்து குழந்தைகள் மற்றும் கணவனை இழந்த இளம்பெண் துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
