திருச்சி அருகே உள்ள அல்லூர் ஜனதா நகர் பகுதியில் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 54). பி.காம். பட்டதாரி. இவர் சிறிது காலம் சவுதி அரேபியாவில் பணியாற்றினார். பின்னர் கடந்த 2020-ல் சொந்த ஊர் திரும்பினார். அதன் பின்னர் இங்கு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் ஒரு முகநூலில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து(ஒர்க் அட் ஹோம்) மாதம் ரூ. 30,000 முதல் 60 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற ஒரு விளம்பரத்தை பார்த்தார்.
இதனை நம்பியவர் வாட்ஸ் அப் மூலம் அதில் சாட்டிங் செய்துள்ளார். உடனே அந்த லிங்க் கிடைத்தது.பின்னர் அந்த நிறுவனத்தில் முதல் நாள் ரூ. 200 முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ.400 கமிஷனாக வந்து சேர்ந்தது. இரட்டிப்பு கமிஷன் கிடைத்ததும் உற்சாகமடைந்த சுவாமிநாதன் ஒரு சில வாரங்களில் மேற்கண்ட நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ரூ. 9 லட்சத்தி 33 ஆயிரத்து 216 முதலீடு செய்தார். பின்னர் அந்த தொகையோ, அதற்கான கமிஷனோ திரும்ப கிடைக்கவில்லை.
ஆனால் முதலீட்டுக்கான கமிஷன் தொகை விவரம் அவரது வாட்ஸ் அப் முகவரிக்கு வந்து கொண்டிருந்தது. ஆகவே விரைவில் வங்கி கணக்குக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சுவாமிநாதன் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் கூறும் போது,
இவ்வாறு வேலை தேடும் நபர்களை பகுதி நேர வேலை, வீட்டிலிருந்து வேலை என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆன்லைன் மோசடி கும்பல் தங்களின் வலையில் வீழ்த்தி இலட்சக்கணக்கில் பணம் பறித்து வருவதாக கூறினார்.