கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வேகமாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.அப்போது அந்த வேன் நிற்காமல் ஆய்வாளர் கனகராஜ் மீது மோதி விட்டு வேகமாக சென்றது.
மேலும் வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஆய்வாளர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திருடர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத தமிழகத்தில், தற்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் வேன் மோதி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என வாகன ஆய்வாளர் மரணம் குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது:
கரூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் மோதியது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்! என அவர் தெரிவித்துள்ளார்.