திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா இளைஞர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி கடந்த 2021ம் ஆண்டு பராமரிப்பின்றி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா இளைஞர் தங்கும் விடுதியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு எழுதும் இளைஞர்கள் உள்ளிட்டோர் தங்கி பயன்பட்டு வந்தனர் ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. அப்போது இந்த தங்கும் விடுதியை புனரமைக்க ரூபாய் 90 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் அதன் அடிப்படையில் மீண்டும் கட்டடத்தின் புணரமைக்கும் பணிகளுக்காக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.

மேலும் செம்பரபாக்கம் ஏரி அணை விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எனக்கு பரிச்சயமானவர் நான் மதிக்கக் கூடியவர் தான் ஆனால் அவர் சொல்லும் கருத்துக்கு நான் வேறுபடுகிறேன். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் ஆங்காங்கே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழை சொல்லிவிட்டு வருவதில்லை திடீரென அடை மழை பெய்கிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. மேலும் அதிகாரிகள் அணைகளை கண்காணித்து வருகின்றனர். அணைகள் நிரம்பினால் உடனடியாக அதனை திறக்கும் இடத்தில் அதிகாரிகள் உள்ளனர். குறிப்பாக அணையை திறக்க பத்து நிமிடம் காலதாமதம் ஆனால் பெரிய அபாயம் ஏற்பட்டு விடும். அதனால் அணையை திறந்து விடும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது அந்த அதிகாரத்தின் பேரில் அந்த உத்தரவின் பேரில் அவர்கள் அனையை திறந்து விட்டுள்ளனர். எல்லோருக்கும் சொல்லிவிட்டு அணையைத் திறந்து விட வேண்டும் என்று இல்லை. எனக்கு இதில் மாறுபட்ட கருத்து உள்ளது. அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு என்னென்ன நடக்குது என்கிற விவரத்தை அவர்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் அவரிடம் சொல்லிட்டு தான் திறக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது என தெரிவித்தார்.
