திருச்சி காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 90 நாட்களுக்குள் முற்றிலும் நெகிழி இல்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதே போல ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு பொருட்களுக்கு மாற்று பொருள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்று ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இதற்கு பதிலாக மண்குவளைகள் பீங்கான், எவர்சில்வர் பாத்திரங்கள் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து விவசாய நிலங்களையும் எதிர்கால சந்ததிகளையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என எடுத்துரைத்ததை தொடர்ந்து நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, அதற்கான மாற்று பொருளினை காட்டுப்புத்தூர் பேரூராட்சி வணிகர் சங்க தலைவர் திருமணி (எ) குப்புசாமியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது பொதுமக்களின் பார்வைக்காக மண்பாண்ட குவளைகள், மண்பாண்ட கலன், மரத்தினால் செய்யப்பட்ட கரண்டி, குடுவைகள் மற்றும் மஞ்சப்பை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது தலைமை வகித்தார், பேரூராட்சி தலைவர் சங்கீதா, துணை தலைவர் சுதா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், வணிகர்கள் பங்கேற்றிருந்தனர்.