திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் இருந்து சேரும் கழிவுகள் குப்பை தொட்டிகளிலும், சாலை யோரங்களிலும் கொட்டப்படுகிறது.
இந்த குப்பை கழிவுகளை தேடி ஒவ்வொரு வீதியிலும் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகிறது. உணவிற்காக நாய்கள் சண்டை போட்டுக் கொள்வதுடன் சாலையின் குறுக்கே பாய்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், குழந்தைகளையும் நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புள்ள தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் காவலர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
அதிலும் அதிகாலை வேலைகளில் நடை பயிற்சி செல்லும் காவலர்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை நாய்கள் விரட்டி கடிப்பதால் நாய்களை பிடிக்க கோரி மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர் அதன்படி இன்று காலை மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டி மூலம் ஊழியர்கள் காவலர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்த தெரு நாய்களை பிடித்து சென்றனர்.