ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், தற்போது தமிழக காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா வயது 26, இவர் சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். காவலர்களான நெப்போலியன் மற்றும் நிரஞ்சன் ஆகியோருடன் சேர்ந்து சாதிக்பாஷா கீழ்ப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக சாதிக்பாஷா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நெப்போலியன் மற்றும் நிரஞ்சன் இருவரும் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் இருவரும் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாதிக் பாஷா, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாதிக்பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் சாதிக்பாஷா எழுதிய 2 கடிதம் கிடைத்துள்ளது. அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்தார். மேலும் அவரது நண்பர்கள் கூறுகையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டும் விடுமுறை அளிக்காததால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் காவலர் சாதிக் பாஷா காணப்பட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாதிக் பாஷா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.