காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூரல் இருந்து 1.95 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரியில் 1.30 லட்சம் கன அடி தண்ணீர் முக்கொம்பு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 41 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 89 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது,தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.