காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணை தனது முமு கொள்ளளவை எட்டியதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொருத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேலும் பருவமழை காலம் என்பதனாலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவில் இருப்பதனாலும்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தினை பொருத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும் என்பதனாலும் பருவமழை காலம் முடிவடையும் வரை காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மேலும் சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.