திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் , குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இரத்த சோகை குறைப்பதற்கான முன்னோடித் திட்டமாக அந்தநல்லூர் ஒன்றியத்தில் 20 முதல் 24 வயது வரையிலான திருமணமாகாத பெண்களுக்கும் , வையம்பட்டி ஒன்றியத்தில் 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று சிவப்பு அவல் உருண்டைகளை வழங்கி இப்பணிகளைத் தொடங்கி வைத்தார் . மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் , போஷான் அபியான் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றான பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் இரத்த சோகையை குறைப்பதற்காக புதிய செயல்பாடாக
திருச்சி மாவட்டம் , அந்தநல்லுார் வட்டாரத்தில் உள்ள இரத்த சோகை கண்டறியப்பட்ட 20 முதல் 24 வயதுடைய 2,053 பெண்களுக்கும் மற்றும் வையம்பட்டி வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் ( அங்கன்வாடி மையம் ) முன்பருவ கல்வியில் பயன்பெறும் 2 முதல் 5 வயதுடைய 2,200 குழந்தைகளுக்கும் ஆறு மாத காலத்திற்கு ( 180 நாட்களுக்கு ) முன்னோடித் திட்டமாக சிவப்பு அவல் உருண்டை வழங்கப்படவுள்ளது . இந்நிகழ்வில் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் ( மாவட்ட திட்ட அலுவலர் ) ரேணுகா மற்றும் இத்திட்டத்தின் அலுவலர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டனர்.