தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் முயற்சியில் மக்களும் கரம் கோர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள், நிதி நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவலாம், நேரடியாக முதல்வரிடமோ, அதிகாரிகளிடமோ, அமைச்சர்களிடமோ நிதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வருமான வரி அளிக்கப்படும். வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்களுக்கும் இதேபோன்று வரி விலக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி தருபவர்கள் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் , நன்கொடை மற்றும் செலவினங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் இதனால் தாராளமாக நிதி வழங்கவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.