திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ஆட்சியரகம் முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக அனைத்து துறைகளிலும் பார்வையற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட தடையாக இருக்கும் அரசாணை எண் 24ஐ திரும்ப பெற்றுக் கொண்டு, அரசாணை எண் 20 மற்றும் 159 ன் அடிப்படையில், பார்வையற்றோர்களுக்கு தனி இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வருவாய் துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ₹1,500ஐ, அண்டை மாநிலங்களில் வழங்குவது போல உயர்த்தி ₹5,000 ஆக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினை நேரடியாக கவனித்து வரும் தமிழக முதல்வர் விரைந்து நிறைவேற்றித் தரவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நேரில் வலியுறுத்த ஏதுவாக, தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித்தரவேண்டுமென வலியுறுத்தி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோர்கள் குடும்பத்துடன் சாலையில் படுத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 1மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
