தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்து அங்கிருந்த மாட்டு வண்டியில் ஏறி பொதுமக்களுடன் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினார். தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழாவில் பானை உடைத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் குடும்பத்துடன் கலந்து கொண்டு அங்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பொங்கல் விழாவினை குடும்பத்துடன் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி , மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, மாத்தூர் ஒன்றிய செயலாளர் கருப்பையா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.