திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் 11ம் திருநாளான 17ம் தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12ம் திருநாளான நேற்று அமமன் முத்து பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான இன்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி காலை 12.01 மணிக்கு அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார்.
மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் கண்டருளினார். இரவு 8 மணிக்கு தெப்ப மிதவையில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன் 3 முறை மைய மண்டபத்தை வலம் வந்தார். மைய மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தெப்பத்தில் இருந்து புறப்பட்ட அம்மன் வீதி உலா வந்து மூலஸ்தானம் வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.