திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் தவறி விழுந்த கார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவரின் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் என பல்வேறு தரப்பினர் வந்திருந்தனர். இதில் ஒருசில இளைஞர்கள் தெப்பக்குளம் பகுதியில் கை பிரேக் போடாமல் கார் ஒன்றை நிறுத்தி உள்ளனர்.மேலும் அந்த இளைஞர்கள் காரில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.*
அப்போது கார் நகர்ந்து தெப்பக்குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியது. அதற்குள் காரில் இருந்த இளைஞர்கள் கீழே குதித்து உயிர்த் தப்பியுள்ளனர்.இது குறித்து சமயபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தில் விழுந்த காரை மீட்டனர்.இதனைத் தொடர்ந்து சமயபுரம் போலீசார் காரை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் கார் யாருடையது, எங்கிருந்து வந்தார்கள் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இன்று இரவு சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச விழாவையொட்டி தெப்பத்தேர் நடைபெற உள்ளது. ஒருவேளை கார் தெப்பக்குளத்தில் விழுந்ததில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருந்தால் தெப்பத்தேர் திருவிழா தடைப்பட்டிருக்கும். மாரியம்மனின் மகிமையால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிக்கப்பட்டது.