தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகம் முழுவதும் இருந்து இங்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் ஞாயிறு போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் நடைபெற உள்ள நிலையில் இன்று ராஜகோபுரத்தின் உச்சியில் நான்கே முக்கால் அடி உயரம், 60 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட 7 செம்பு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது.
ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி இன்று காலை .05 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு பிரதிஷ்டை நடைபெறுகிறது. மேலும் 5-ம் தேதி காலை 8.30 மணிக்கு யாக சாலையில் இரண்டாம் கால யாக பூஜைகளும், அன்று மாலை 05.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளுடன் 6-ம் தேதி காலை 4.30 மணிக்கு கால பூஜையுடன் துவங்கி காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது.
இதில் லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசிப்பார்கள் என்பதால் விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.