தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விலை வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதன்படி திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பொதுவாக தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் சின்னவெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், திருச்சியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். திருச்சி வெங்காயம் மண்டியில் கிலோ ரூபாய் 60 க்கு விற்று வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூபாய் 25 க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் தற்போது ரூபாய் 25 க்கு விற்கப்படுவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த விலை வீழ்ச்சியால் திருச்சி வெங்காயம் தரகு மண்டியில் சின்ன வெங்காயம் நாளொன்றுக்கு 100 டன் அளவில் 300 டன் தேக்கம் அடைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் எனவும்,கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் தமிழக வெங்காய விவசாயிகளுக்கு ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைக்க வில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து ஒரு கிலோ வெங்காயம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஒரு கிலோவிற்கு சுமார் 30 ரூபாய் வரை வரி கட்ட வேண்டும், மேலும் பேக்கிங் செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகள் உள்ளதால் வெளிநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வது கடினமான நிலை உள்ளது.
தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் வெங்காய விவசாயிகள் நலன் கருதி ஏற்றுமதி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிக்கும் மாதங்களில் மட்டுமாவது மத்திய அரசு ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளித்தால் தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான வெங்காய விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்.இல்லையென்றால் உற்பத்தி அதிகரிக்கும் போது, வெங்காய விலை வீழ்ச்சி அடைந்து அழுகி கடும் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.