திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள குடோனில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் லால்குடி வட்ட வழங்கல் அலுவலருக்கு இன்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதில் திருச்சி லால்குடி பகுதி சிவன் கோவில் அருகே உள்ள ஸ்ரீமதி ஏஜென்சிஸ் என்ற சிமென்ட் விற்பனை கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய் , தனி வருவாய் ஆய்வாளர் இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக அங்கு சென்று பார்த்தபோது சிமெண்ட் கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அதிகாரகளை கண்ட கடை உரிமையாளர் கீர்த்திவாசன், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் சிமெண்ட் கடையை அதிகாரிகள் சோதனையிட்டதில் சிமெண்ட் கடை என்ற பெயரில் ரேஷன் அரிசியை அரைத்து மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரிய வந்தது. கடத்த முயன்ற லாரியில் இருந்த 513 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் 1 கோதுமை மூட்டை உள்ளிட்ட 31,806 டன் கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தல் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் :- மணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் லால்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருகிறது. அதிலும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் மட்டுமே பறிமுதல் செய்கின்றனர். ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மேலும் இதுபோன்ற ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் உறுதுணையாக இருக்கின்றனர் என வேதனையுடன் தெரிவித்தனர்.