திருச்சி லால்குடி பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மோகன் இவரது மகள் தீபிகா வயது 12 அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தெருவில் வழியாக நடந்து சென்றபோது அங்கு நேற்று இரவு பெய்த மழையால் சாக்கடை நீர் வழிந்தோடி அப்பகுதி உள்ள மின் கம்பத்தை சூழ்ந்து இருந்துள்ளது. இதனைக் கடந்து சென்ற மாணவியின் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்ட போது சுயநினைவு அற்ற நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவர் இறந்து விட்டதாகக் கருதி, லால்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்தனர். அப்போது அங்கு பணியாற்றிய டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் நிபுணர் பிரபாகரன் ஆகியோர் மாணவியை பரிசோதனை செய்து தங்களின் விடா முயற்சியால் தொடர்ந்து 5 முறைக்கு மேல் செயற்கை சுவாசம் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து சிறுமியை உயிருடன் மீட்டனர். மேலும் உடனடியாக சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
பொதுவாக அரசு மருத்துவமனை என்றாலே பொதுமக்கள் மத்தியில் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலை வரும் வேளையில் திருச்சி லால்குடி அரசு மருத்துவமனையில் இன்று மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி இறந்துவிட்டார் என்று நினைத்திருந்த நிலையில் மாணவியை சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் நிபுணர் பிரபாகரன் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.