வேலூர் மாவட்டம் அரியூர் ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி திலகவதி இவர்களின் ஒரே மகன் சபரி (வயது 7). கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கார்த்திக் உயிரிழந்த நிலையில், மகன் சபரி வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி பயந்து அலறியபடி சத்தமிட்டு வந்துள்ளார். இதனால் திலகவதி தனது மகனுக்கு பேய் பிடித்து இருப்பதாக நினைத்து பேயை ஓட்ட வந்தவாசியில் உள்ள பேய்கள் ஓட்டும் ஒரு வருவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திலகவதி மற்றும் இவரின் சகோதரிகளுடன் கிளம்பி சென்றார். நள்ளிரவு நேரமாக இருந்ததால் இவர்கள் 4 பெறும் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு தங்கிய நிலையில், அதிகாலை 3 மணியளவில் சபரிக்கு வலிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன 3 பேரும், சபரியின் உடலில் பேய் புகுந்துவிட்டது என்று நினைத்து சிறுவனை தாக்கி, கழுத்தை நெரித்து பேயை ஓட்டுவதாக நினைத்து அடித்துள்ளனர்.ஏற்கனவே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சிறுவன், வலிப்பு மற்றும் உடல் சோர்வால் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனை அவர்கள் தாக்கியதில் முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், அவன் கத்தாமல் இருக்க நாக்கையும் அறுத்துள்ளனர்.சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் வந்து பார்த்து சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர். அப்போது காப்பாற்ற வந்த பொதுமக்களையும் பெண்கள் மூன்று பேரும் தாக்கி சண்டையிட்டு உள்ளனர். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர்போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடம் வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சிறுவனின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகளை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். பெற்ற மகனுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து தாய் மற்றும் சகோதரிகள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.