திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் 179 கிராம் எடை கொண்ட ஒரு தங்க சங்கிலியையும், செல்போன்களுக்குள் மறைத்து செவ்வக வடிவிலான 360 கிராம் எடை கொண்ட 12 மெல்லிய தங்க தகடுகளையும் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 539 கிராம் எடை கொண்ட, ₹.31.62 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.