திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவு பேரில் திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருச்சி பீமநகர், மாசிங்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சிந்தாமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் ஒருவர் தன்னிடம் இருந்து சிறுவர்கள் சிலர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடியதாக புகார் தெரிவித்தார், இதனை தொடர்ந்து அப்துல்காதர் காவிரி பாலம் அருகே ஓடத்துறை செல்லும் பகுதியில் சிறுவர்கள் சிலர் நின்றிருந்தனர். அவர்களை அழைத்து விசாரணை செய்து போது திடீரென அந்த சிறுவர்கள் கத்தி எடுத்து அப்துல்காதரை தலை மற்றும் கைப்பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
வெட்டுப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட அப்துல்காதர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சிந்தாமணி அண்ணாசாலைப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வாசலிலே மயங்கி விழுந்தார்.இதைக் கண்ட மருத்துவமனையில் இருந்தவர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதை தொடர்ந்து வெட்டி விட்டு தப்பி சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் தற்போது இரண்டு இளைஞர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் சிலர் சிந்தாமணி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. காவலர் வெட்டிய சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.