திருச்சி திருவரம்பூர் தாலுகா நவல்பட்டு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவினை இந்த வருடமும் நடத்திட அனுமதி கோரி கிராம பொதுமக்கள் சார்பாக கிராமத் தலைவர் சேட்டு தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவராஜிடம் ஜல்லிக்கட்டு விழா நடத்திட அனுமதி கோரி மனு அளிக்க வந்தனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் புதுக்கோட்டை சேலம் சிவகங்கை பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 900-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்க உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்குபெற உள்ளனர். பங்குபெறும் அனைவரும் அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்து பங்கேற்க உள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வின்போது கிராம செயலாளர் சன் பாலு ஜல்லிக்கட்டு பேரவை திருச்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.