கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டேற்றி தொழிகோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு ஆரதி, வீணா(15) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இளையமகள் வீணா அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அய்யப்பன் தனது மூத்த மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.அப்போது, வீணா தனக்கும் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால், பிளஸ் 2 முடித்த பிறகு தான் செல்போன் வாங்கி தருவதாக தந்தை தெரிவித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த வீணா வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த வீணா, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கருங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அங்கு வீணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த புதுக்கடை போலீசார், வீணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.