திருச்சி மாநகர், மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மிக மோசமான நிலையில் உள்ளது. முறையான கட்டமைப்புகள் இல்லாததால் நெல் வீணாகி வருகிறது. நெல் கொள்முதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.500 கோடி மதிப்பிலான 3.75 லட்சம் டன் நெல் வீணடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், 600 முதல் 700 மூட்டைகள் கூட கொள்முதல் செய்வதில்லை. எனவே, விவசாய விரோத அரசாக தமிழக அரசு உள்ளது. மேலும், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. நெல்லை கொள்முதல் செய்வதற்கும், அதை பாதுகாப்பதற்கும் மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதியளிக்கிறது. ஆனால், தமிழக அரசு உரிய கட்டமைப்புகளை உருவாக்காமலும், நெல் கொள்முதலை முறையாக மேற்கொள்ளாமலும் தவறியிருக்கிறது. மழை வரும் என்று தெரிந்தும் நெல் கொள்முதலில் அரசு கவனம் செலுத்தவில்லை.

அதிமுக ஆட்சியிலும் இதேபோலதான் இருந்ததாக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். இதேபோல, தமிழகத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய கட்டமைப்புகளும், சிறந்த கல்வியும் தேவை எனக் கருதி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் பிஎம்ஸ்ரீ திட்டத்தின்கீழ் பல மொழிகள் கற்றுத்தரப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1 கோடி வரை நிதி கிடைக்கும். இதன்மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவர். ஆனால், இதை மொழி ரீதியான பிரச்னையாக திமுக அரசு தூண்டிவிடுகிறது. கரூரில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தில் காவல் துறை மீதோ, ஆட்சியர் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாசிஸ ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக அரசை அகற்றுவதற்காக எங்கள் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழத்தில் 234 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். மறுபுறம் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மக்களை சந்தித்துகொண்டிருக்கிறார். தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக அரசு நாசமாக்கியுள்ளது.

இதை சரிசெய்வதற்காக தமிழத்தில் அதிமுக தலைமையில் இயங்கக் கூடிய தேசிய ஜனநாயக் கூட்டணி வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, பொருளாளர் செல்லதுரை, சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் புகழ் மச்சேந்திரன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முரளி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஒப்பிலி சீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர்கள் பாலசந்திரன் வீரராகவன், ரங்கநாதன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்பம் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
