திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அ.அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கழக தலைவர் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள படி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசும் போது, ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 30 சதவீதத்தினரை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நாம் தொகுதிக்கு 20 சதவீதம் பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம்.
திமுகவினர் தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். இன்று பலர் மிரட்டுகிறார்கள் திமுக மீண்டும் ஆட்சி அமைக்காது நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் எள் முனை அளவு கூட சந்தேகமில்லை மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் முதலமைச்சருக்கு பின்னால் தான் இருக்கிறார்கள். துணிச்சலாக நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம். யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் அது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. திமுக கூட்டணியை பத்தாண்டுகளுக்கு மேலாக முதலமைச்சர் சிறப்பாக சுமூகமாக வழி நடத்தி வருகிறார். கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூடுதலாக தொகுதி கேட்பார்கள் என சிலர் கூறி வருகிறார்கள். அதை முதலமைச்சரும் தோழமை கட்சியின் தலைவரும் பார்த்துக் கொள்வார்கள்.
அவர்கள் முடிவு செய்து இவர் தான் வேட்பாளர் எனக் கூறினால் நாம் அவர்கள் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். முதலமைச்சரிடம் உத்தரவிற்கு நாம் உறுதியாக செயலாற்ற வேண்டும். கடலூரில் நான்கு தொகுதி உள்ளிட்ட 41 தொகுதிகளை இந்த முறை நமக்கு பணியாற்ற தந்துள்ளார்கள் அதில் பெரும்பாலான தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என பேசினார். கூட்டத்தில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பா. பரணிகுமார், பொருளாளர் துரைராஜ், தர்மன் ராஜேந்திரன்,செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.