வருகிற மே-6ம் தேதி காலை 4.00 மணி முதல் மே-20ம் தேதி காலை 4.00மணி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது . அண்மை காலங்களில் இந்திய அளவில் ஒரு சில நாட்களில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது . குறிப்பாக , மஹாராஷ்ட்ரா , கர்நாடகா , கேரளா , உத்திரப்பிரதேசம் , டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது . தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று , பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 – க்கும் மேல் பதிவாகி வருகிறது . 23 – க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது . தமிழ்நாட்டில் 03.05.2021 – ஆம் நாள் கணக்கீடுபடி , தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உள்ளது .கடந்த 30.04.2021 அன்று , தமிழக அரசின் தலைமைச் செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது , சுகாதாரத் துறையால் அளிக்கப்பட்ட நோய்ப் பரவல் விகிதாச்சார அறிக்கையினை பரிசீலனை செய்ததில் , தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் நோய்த் தொற்று விழுக்காடு 10 சதவீதத்திற்கு மேலாக உள்ளது . மேலும் , மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் நிரம்பியுள்ளது தொடர்பான அறிக்கையினை பரிசீலனை செய்ததில் , பல்வேறு மாவட்டங்களில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 60 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது தெரியவருகிறது . தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும் , நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் , தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த , தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் , 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரை பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன .