தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப நல ஓய்வூதியர்கள் நலச் சங்க திருச்சி கிளை துவக்க விழா ஞாயிறன்று அஜந்தா ஓட்டலில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ராமானுஜம், மாநில பொதுச்செயலாளர் பொன். ஆறுமுகம், மாநில பொருளாளர் கோதண்டம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ செலவிற்கான முழு தொகையும் இன்சூரன்ஸ் மூலம் வழங்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற அனைத்து சலுகைகளையும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களிடம் பிடித்தம் செய்து கடந்த 6 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள குடும்ப சேம நல நிதியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக எ.நாகராஜன், செயலாளராக ஆர்.நாகேந்திரன், துணை செயலாளராக கந்தசாமி, பொருளாளராக கோடீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் வரவேற்றார். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் சர்ச்சில் நன்றி கூறினார்.
