திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கான 2 நாள் ஓவியம் மற்றும் சிற்பக்கலைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இன்றும், நாளையும் நடைபெறும் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இந்த முகாமை திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர்(பொ) சி.நீலமேகன் துவக்கி வைத்தார். இம்முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் மா.அய்யப்பா, மா.ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டு மரபுபாணி ஓவியம், நவீனபாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்பம் ஆகியன குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கின்றனர்.

இரண்டாம் நாளான நாளை நடக்கும் பயிற்சி முகாமின் நிறைவு விழாவிற்கு திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் த.ஜெகதீஸ்வரி தலைமை வகித்து பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவுள்ளார். முன்னதாக திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர்(பொ) சி.நீலமேகன் வரவேற்க, முடிவில் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனலோச்சனி நன்றி கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *