தமிழ்நாடு அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட கோரிக்கை தீர்மானங்கள்.
இந்த கல்வியாண்டில் நடத்தப்பட வேண்டிய அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்திட கோரியும், கல்வி அலுவலர்கள் நியமனம், கணினி ஆசிரியர் பணியிடங்கள், சிறப்பாசிரியர் நியமனம், ஆசிரியரல்லா பணியிடங்கள் ஆகியவற்றை உடனே நிரப்ப கோரியும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் பின்பற்றுவது போல பள்ளி விடுதி ஆகியவற்றிற்கு தனித்தனியான பணியாளர்களை நியமித்திட கோரியும், மாணவர்களின் நகர்வு சார்ந்த செயல்பாடுகளை ஆணையரகத்திலிருந்து நிலை 1 நிலை 2 அலுவலர்கள் மூலம் கண்காணித்திட அனைத்து விடுதிகளிலும் பயோமெட்ரிக் கருவிகளை பொருத்த கோரியும், 112 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை காலிப்பணியிடங்களை சேர்க்கப்படாதது குறித்தும், ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயில அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் அதற்கு ஏற்ற வண்ணம் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட தலைவர் அப்துல் ஜாபர் நன்றியுரையாற்றினார்.