திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய மற்றும் தண்டனை அடைந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கூர்நோக்கு இல்ல கழிவறையில் சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான் இதனை கண்ட வார்டன் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் கூர்நோக்கு இல்லம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சிறுவன் வயது 17 என்பதும், குற்ற வழக்கு சம்பந்தமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 30 நாட்களாக திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் சிறுவனின் தாய் தன்னை பெயிலில் எடுக்காத வருத்தத்தில் இருந்து வந்த சிறுவன், கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.