தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 33 – வது நாளான இன்று உடம்பில் கட்டு போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.. மேலும் காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. விவசாயிகள் வாங்கிய கடனுக்கு மேல் பணம் செலுத்திய பிறகும், இன்னும் பணம் செலுத்த வேண்டும் என வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனமும் தொடர்ந்து விவசாயிகளை அச்சுறுத்தியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியும் வருகிறது. இது தொடர்பாக மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வலியுறுத்தி இன்று உடம்பு முழுவதும் கட்டு போட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். மாநில அரசு விவசாயிகளை அடிமைகளாக பார்க்கிறது. எங்களுடைய போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என காவல்துறை பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.