தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வுக்குப் பிறகு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ 9000 வழங்க வேண்டும். மே மாத விடுமுறையை ஒரு மாத காலமாக வழங்க வேண்டும். 1993-ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை அரசு கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

அனைத்து மாவட்டங்களுக்கும் 5 ஜி அலைபேசி 5ஜி சிம் வழங்கி அனைத்து மையங்களுக்கும் வைபை இணைப்பை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் ராணி, மாநில துணைத்தலைவர் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் மணிமாறன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
