திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் இன்று அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட விமானநிலையம் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மெட்ரிக்குலேசன் என்ற பெயரில் சிறுபான்மையினர் நிர்வாகத்தின்கீழ் செயல்படும் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருபாலரும் படிக்கும் இப்பள்ளியில் கடந்த 2023 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. மேலும் கல்வி வளாகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி புதிய கட்டிடக் கட்டுமானப் பணிக்கு கடந்த 28-10-23 தேதியில் அடிக்கல் நாட்டப்பட்டது.தற்யோது மேற்படி சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகம் நாராயணா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதால்தான் சி.பி.எஸ் இ . என்ற பாடத்திட்டத்தில் வரும் 2024-2025 கல்வி ஆண்டில் செயல்பட உள்ளது. இத்தகைய மாற்றங்களால் வழக்கமான தனியார் பள்ளிக் கல்விக் கட்டணங்களிலும் திருத்தம் செய்யப்பட்டு சுமார் மூன்று மடங்கு (ரூபாய் 22,000/-ல் இருந்து ரூபாய் 80,000/- வரை) கூடுதலாக கல்வி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என அறிகிறோம். இதுபற்றி பெற்றோர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
மேலும் இது பற்றி பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்க முற்பட்டால் அவர்களை சந்திக்காமல் பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பி விடுகிறது. இன்னும் நடப்பு ஆண்டு மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் விடை தாள்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தரவில்லை. ஆர்.டி.ஐமூலம் பல மாணவர்கள் படிப்பதால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் அவர்களால் இந்த ஆர்.டி.ஐ. இடஒதிக்கீடு கிடைப்பது அரிதாகும் அல்லது படிக்க முடியாமல் போகும். எனவே, குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு படிப்பைத் தொடரவும் சராசரி மற்றும் நடுத்தர குடும்பப் பொருளாதாரப் பின்னணிக் கொண்ட பெற்றோர்கள் பாதிப்படையாத வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுத்து பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.