திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெரம்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, லால்குடி, மன்னச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அருகில் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆணையர் வைத்தியநாதன் வருவாய் அலுவலர் அபிராமி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 10413 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 11 லட்சத்து 20158 பேரும் பெண்கள் 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2544. அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் 3,01,659, குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக லால்குடி 2,18,971 உள்ளனர். புதிதாக 43,423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட 34,288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதியில் 1376 உள்ளனர் என என தெரிவித்தார்.