திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு இல்லை எனவும் எனவே இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திருவெறும்பூர் யூனியன் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் இந்த பகுதியில் சேரும் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், முதியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், உள்ளிட்டோர் மிகுந்த சிரமப்படுவதாகவும் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்வதாகவும் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுவதாகவும்

மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் இன்னும் அதிகமாக சேரும் சகதியுமாக இருப்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்று இன்று காலை கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜை கண்டித்தும் திருவெறும்பூர் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் திடீரென சேற்றில் இறங்கி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மேலும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றால் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் மற்றும் திருவெறும்பூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்