திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும் தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். லாரிகளில் வரும் மூட்டைகளை ஏற்றி, இறக்கி விடுவதும் அதற்குரிய உருப்படிக்கான (பீஸ் ரேட்) பெற்று கொள்வது, சில லாரி செட்டுகளில் லாரி வாடகையில் கமிஷன் கூலி என்ற முறையில் வாங்கி கொள்வது, வேலைக்கு ஏற்ற வாரே கூலி என்ற நடைமுறையே இருந்து வருகிறது. இந்நிலையில் சேகர் பிரதர்ஸ் என்ற லாரி செட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்த 12 சுமை பணி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் திட்டத்தோடு வேலை தராமல் அதே முதலாளி வேறு ஒரு இடத்தில் சி.எம் லேஜஸ்டிக் என்ற பெயரில் பெயரை மாற்றி லாரிகளை அங்கு கொண்டு சென்று குறைந்த கூலிக்கு வேறு ஆட்களை வைத்து வேலை செய்ய முயற்சித்து வருகிறார். இதனால் கடந்த 75 நாட்களாக 12 சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து பசியால் வாடி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை பரிந்துரை பெயரில் தொழிலார் இணை ஆணையர் தலையிட்டு விசாரணை செய்து 12 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என எழுத்து பூர்வமான உத்தரவு பிறப்பித்தார்.

மேற்கண்ட உத்தரவு வழங்கப்பட்டு 25 நாட்கள் ஆன பின்பும் அரசு அதிகாரிகள் , காவல் துறையினர் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து விட எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்கை கண்டித்து சிஐடியுலாரி லாரி புக்கிங் ஆபிஸ் லோடுமேன் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு லாரி புக்கிங் ஆபிஸ் லோடுமேன் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ஜி.கே.ராமர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் தக்காளி ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் தக்காளி செந்தில், தக்காளி மண்டி சங்க நிர்வாகி ஆரோக்கியம், லாரி செட் சங்க துணைத் தலைவர் ராமர், லாரி செட் சங்க பொருளாளர் மூர்த்தி ஆகியோர் பேசினர்.இதில் ஏராளமான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
