தூத்துக்குடி மாவட்டம் காரங்காடு பகுதியை சேர்ந்த குருபரன். இவரது பெரியம்மா மகள் ரேணுகா என்பவருடன் 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இவர்களைப் பின்தொடர்ந்து வந்த 5 பேர் ரேணுகா வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு காரில் தப்பி ஓடினர். உடனே கைப்பையை இழந்த ரேணுகா கூச்சலிட்டதால் அப்பகுதியில் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த காரில் சென்றவர்களை துரத்தினர். பின்னர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அந்த வழிப்பறி திருடர்கள் காரில் இருந்த 5 பேரில் 3 பேர் தப்பித்து ஓடிய நிலையில், இரண்டு பேரை பிடித்த ஆட்டோ ஓட்டுனர்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீசார் பணத்தை இழந்தவர்களிடமும், பணத்தை பறித்து சென்றதாக பிடிப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த காரங்காடு பகுதியை அண்ணன் தங்கை இருவரும் புதிதாக செல்போன் உதிரிபாக கடை வைப்பதற்காக இரண்டு லட்சத்து 45 ஆயிரம் பணத்துடன் திருச்சி வந்துள்ளனர். இவர்கள் ஆன்லைன் விளம்பரத்தில் இருந்த ஒரு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டதாகவும், அந்த நபர் அழைத்தன் பேரில் திருச்சி வந்த நிலையில் இந்த வழிப்பறி சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் அந்த ஆன்லைனில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது அன்சார், மதுரையை சேர்ந்த ஜகநாதன் என்பது தெரியவந்தது. காருடன் பிடிபட்ட 2 பேரை போலீசார் கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் தப்பி ஓடிய 3 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு திருச்சி வந்த அண்ணன் தங்கையிடம் ஐந்து பேர் கொண்ட கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாக போலீசார் சந்தேகித்து தற்போது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.