திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ஆயிரத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றி வாழ்க்கை செலவினம் உயர்வு கருதி 5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சுமை கட்டணத்தை விளக்கு அளிக்க வேண்டும்,
பார்வையற்றோரை வேலைக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஊக்கத்தொகை மற்றும் வரிகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க 50க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திய காரணத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் பார்வையற்றோரின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முழக்கங்கள் எழுப்பினர்.