திருச்சி மாவட்டம் ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்கு போராடிய பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருச்சி எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மகள் கலைவாணி (வயது 19) என்ற கல்லூரி மாணவி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக திருச்சி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தெடார்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தொடர் விசாரணையில், ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவி கலைவாணியின் குழந்தை என்பது தெரியவந்தது. மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி கலைவாணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலைவாணி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக மாசிஸ்திரேட்டிடம் கலைவாணி மரண வாக்குமூலம் அளித்தார். மாணவி அளித்த மரண வாக்கு மூலத்தில் தனது வாயில் விஷத்தை ஊற்றியது தனது தந்தை மற்றும் அத்தை என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ‘வாயில் கட்டாயப்படுத்தி விஷத்தை ஊற்றியதாக’, மாணவியிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்கொலை வழக்கு, தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றம் செய்து, மாணவியின் தந்தை செல்வமணி (50), அத்தை மல்லிகா (55) ஆகியோரை ஜீயபுரம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.