போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புட ன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் ஒட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசியதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும். இதனை நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களிடத்திலும் மக்களிடத்திலும் எடுத்துக் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ்ந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.என்று பேசினார்.
இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, அன்பு, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,, கோட்டாட்சியர் தவச்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.